"தமிழ்நாட்டில் சிண்டிகேட் வைத்து போதை பொருட்கள் கடத்தல்" - #TNGoverner ஆர்.என்.ரவி பேச்சு!
தமிழ்நாட்டில் சிண்டிகேட் வைத்து போதை பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறித்துவ மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்றனர். போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் மேடையில் கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டினர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது :
"நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய நாட்டின் நாளைய பெண் தலைவர்கள் என் முன்னாள் இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. பெண் ஒரு குடும்பத்தின் முதுகெலும்பு. இன்று பெண்களுக்கு எல்லா கதவுகளும் திறந்து உள்ளது. தற்போது ஆண்களை விட பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
போதைப்பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை பற்றி
இங்கு நாம் பேசி வருகிறோம். தனிநபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதை பொருட்கள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள் விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதை பொருட்களால் அதன் நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்று விற்பனை அதிகமாக உள்ளது.
சிகரெட் வடிவில் விற்பனையாவதை ஏற்க முடியாது. ஹெராயின், கொகயின் போன்ற
போதைப்பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அவர்கள் வாழ்க்கையே சிதைந்து போகிறது. போதை பொருட்களால் அவர்கள் மட்டும் சிதைந்து போகவில்லை. அவர்கள் குடும்பமும் சிதைந்து போகிறது மேலும் சமூகமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
பல பில்லியன் கணக்கில் பணம் பார்க்கக்கூடிய தொழிலாக போதை பொருள் தொழில் உள்ளது. போதை பொருள் புழக்கத்தில் ஈடுபட தமிழகத்தில் சிண்டிகேட் உள்ளது. இந்தியாவின்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல கடல் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி
வரப்படும் போதை பொருட்களை மெட்ரிக் டன் கணக்கில் நமது கடற்படையினர், கடலோர
காவல் படையினர் பறிமுதல் செய்கின்றனர்.சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலம்
தற்போது போதை பொருட்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் மருந்துகளால் வரும் பணத்தில் தான் ஆஃப்கானிஸ்தான் பொருளாதாரமே
உள்ளது. தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம். தேசிய வளர்ச்சிக்கு என்ஜின் ஆக
செயல்படுகிறது. போதை பொருள் பிரச்னை என்பது எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மிகப் பெரிய பிரச்னை. நாம் போதை பொருள் புழக்கத்தை குறைக்க நினைக்க கூடாது.அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்.
போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள். பெற்றோர்களுக்கு அவர்கள்
குழந்தைகளிடம் பேச நேரம் இருப்பதில்லை, இது குறித்து பேசுவதில்லை. நாம் போதை பொருட்கள் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பெற்றோர்கள் இருவரும் வேலை செய்பவர்களாக இருக்கலாம். என்னவாக இருந்தாலும்
குழந்தைகளிடம் பேச அவர்கள் நேர எடுத்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு செல்வதால்
குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் சொல்வதில்லை ஏற்க முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியா உலக அளவில் 6 ஆவது பெரிய பொருளாதார நாடாக
இந்தியா இருந்தது. அதன் பின் வந்த ஆட்சியாளர்களால் 11 ஆவது இடத்திற்கு சென்றது. இன்று 5 ஆவது இடத்தில் இருக்கிறோம். இந்தியா தற்போது அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையான நாடாக உள்ளது. பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னோடியாக உள்ளது.
அமெரிக்க கூட இன்னும் அடையாத இலக்கை நாம் டிஜிட்டல் சேவைகளில் அடைந்துள்ளோம்.
கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்து உள்ளனர். முத்ரா கடன் பெற்றவர்களில் பாதிக்கு மேல் பெண்கள் தான். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு மூலம் நீங்கள் வளர்வது உங்கள் வளர்ச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்வு தனிப்பட்டது மட்டுமல்ல தேசம் வளர்வதில் நீங்களும் ஒரு முக்கிய பங்கு. நம் நாட்டுக்கு இது ஒரு பொற்காலம். கவனத்துடன் இருங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் போதை பொருள் தடுப்பை பரப்புபவராக இருக்க வேண்டும்.
உலகத்தின் நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது. உலகத்தின் என்ஜின் ஆக இருக்கும்
அளவிற்கு வளர்ந்து வருகிறது. நாட்டில் ஒரு புரட்சி நடந்து வருகிறது.கடந்த 10
ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதையெல்லாம் உங்களை போன்ற இளம் பெண்கள் தான் செய்து வருகிறார்கள். தற்போது பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் வளர்ச்சி என்பது வெறுமனே தனிநபர் வளர்ச்சி இல்லை. அது தேசிய வளர்ச்சி, பெண்கள் வளர்ந்தால் தேசம் வளரும்.
நான் உங்கள் வயதில் இருக்கும் போது மின்சாரம் இல்லை, சாலை வசதி இல்லை.இந்த
காலத்தில் நான் உங்களைப் போன்று இளைஞராக இருந்திருக்க வேண்டும் என்று
அவ்வப்போது நினைப்பது உண்டு. இது நமது நாட்டிற்க்கு பொன்னான நேரம்.உங்கள் கனவுகளை போதை பொருட்கள் தடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.