ஆன்லைன் போதை மாத்திரை விற்பனை: இந்தியாமார்ட் சிஇஓ உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
போதை மாத்திரை விற்பனை குறித்த புகார்களின் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் கைது செய்யப்பட்ட நபர்கள் காவல்துறையினர் விசாரணையில் சொல்லும் தகவல், மும்பையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் கூரியர் மூலமாக கிடைக்கிறது என்பதுதான்.
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 நபர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இதே பதில் தான் வந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதிக்கு மும்பையில் இருந்து அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான கூரியர் வருகிறது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அனுப்புநர் முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கூரியர் வந்தது தெரிய வந்தது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மும்பை சென்று பார்த்ததில், நிர்வாக இயக்குனர் சதானந்த் பாண்டே தலைமறைவானது தெரிய
வந்தது.
தலைமறைவான சதானந்த் பாண்டேவை தேடி மும்பை விரைந்த ஸ்ரீபெரும்புதூர்
காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்தனர். இதனிடையே சதானந்த் பாண்டே புனே அருகே தலைமறைவாக இருப்பது தெரிந்த நிலையில் அங்கு விரைந்த போலீசார் மருந்து நிறுவன உரிமையாளர் சதானந்த் பாண்டேவை கைது செய்தனர்.
வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவ குறிப்பு இல்லாமல் வழங்க கூடாது. ஆனால் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் அளவுக்கதிகமாக இந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேற்படி சதானந்த் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், அவரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து போதை மாத்திரை விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்க கூடிய ஆன்லைன் விற்பனை தளமான இந்தியாமார்ட் தலைமை செயல் அலுவலர் தினேஷ் சந்திரா அகர்வால் மற்றும் இயக்குநர்கள் 6 பேர் என 7 பேர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.