முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது தொடர்பான ‘தி இந்து’ நாளிதழ் செய்தி மனநிறைவை தரும் செய்தி. தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறை பட்டதாரிகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம் எனவும் கூறினார்.
‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டதாவது,
“தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை 2022-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். இதன் அடிப்படையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இணைந்து மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
கடந்த 2022 -23-ம் ஆண்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று 1.19 லட்சம் மாணவர்கள் பணி ஆணை பெற்றுள்ளனர். அதில், 61,920 பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் 57,313 கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,591 பேர் பங்கேற்றனர். இதில் 580 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வானவர்கள். 461 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு அதிகபட்ச ஆண்டு ஊதியம் ரூ.3.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.