பூமி திரும்பிய ‘ட்ராகன்’... புன்னகைத்தபடி வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ்!
அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஆய்வு பணிக்காக கடந்த ஜூனில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று எட்டு நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு கடந்த மார்.14ஆம் தேதி அனுப்பியது.
இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் நாசா விண்வெளி வீரர்கள், சக அமெரிக்கரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு) புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிரங்கியது.
விண்வெளியில் இருந்து வீரர்களுடன் திரும்பிய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன், டல்லாஹஸ்ஸிக்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் பாராசூட் உதவியுடன் தரையிரங்கியது. தொடர்ந்து விண்கலத்திலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக தயார் நிலையில் இருந்த கப்பலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து தற்போது வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.