"ஹீரோவாக முயற்சி பண்ணாத!"... சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா!
டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரரான சர்ஃபராஸ் கானை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி கடைசி இன்னிங்ஸை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை இருந்த இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி 3வது நாள் முடிவில் 40 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி உள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரரான சர்ஃபராஸ் கானை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளுக்கு 142 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஷோயப் பஷீருக்கு நெருக்கமாக ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார்.
ஷோயப் பஷீருக்கு அருகில் ஷார்ட் லெக் பீல்டிங்கில் நிற்க சர்ஃபராஸ் வந்தார். இந்த நிலையில் சர்ஃபராஸ் ஹெல்மெட் அணியாமல், குல்தீப் யாதவ்விடம் பந்து வீசுமாறு கூறினார். அதனை பார்த்த ரோகித் சர்மா, “பொறு ஹெல்மெட் வந்துவிடும்” என சர்ஃபராஸிடம் கூறினார்.
அதற்கு சர்ஃபராஸ் “பரவாயில்லை இரண்டு பந்துகள்தானே” என ரோகித்தை சமாதனம் செய்ய முயற்சித்தார். இந்த நிலையில் சர்ஃபராஸ் கான் அருகில் வந்த ரோகித் சர்மா, “ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே, முதலில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு ஃபீல்டிங் செய்” என்று எச்சரிக்கை செய்தார்.