அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார்.
அமெரிக்காவில் நேற்று மாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் 2 வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகிறார் ட்ரம்ப். மேலும் ஒரு தோல்விக்குப் பின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையைப் படைத்தவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். அவர் 1885 இல் முதல் முறையாக அதிபராகப் பதிவியேற்றார். 1889 வரை பதவியில் இருந்தவர். 4 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1893 இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1897 வரை அதிபாராகப் பணியாற்றினார்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், ட்ரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் தான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் அனைத்தும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் 267 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இதுவரை 224 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.