"ஒரு ஹீரோவுக்கு அருகே நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை" - நடிகை ஜோதிகா ஆவேசம்!
ஒரு ஹீரோவுக்கு அருகே நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து 'காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியிருந்தார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23-ம் தேதி வெளியானது.
அந்த திரைப்படம் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. அதே நேரத்தில் படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், ஜோதிகா நேர்காணல் ஒன்றில், "36 வயதினிலே படத்திலிருந்து தான் சினிமா வாழ்வில் என் 2-ம் இன்னிங்க்ஸ் துவங்கியது. இதுவரை நான் நடித்ததிலேயே எனக்கு மிக நெருக்கமான படங்கள் மொழியும், காதல் தி கோரும் தான்" என்றார்.
இதையும் படியுங்கள்: ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…
தொடர்ந்து "காதல் படத்தில் நான் நடித்த ஓமணா நல்ல கதாபாத்திரம். பெரிய இயக்குநர்கள் நாயகிகளை மையமாக வைத்து படங்களை இயக்க முன்வர வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலி போன்ற இயக்குநர் ஆலியா பட்டை மையமாக வைத்து 'கங்குபாய் காத்திவாடி' படத்தை இயக்கினார். அந்த மாதிரி நாயகிகளை இயக்க இயக்குநர்கள் வர வேண்டும்" எனக்கூறினார்.
மேலும் "எனக்கு பெரிய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இருப்பதில்லை. நான் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். என்னைச் சந்திக்க வரும் இயக்குநர்களிடம் எனக்கென 2 காட்சி இருக்குமா எனக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்வியே எவ்வளவு கேவலமாக இருக்கிறது" என்றார்.
பின்னர் "என் கதாபாத்திரத்துக்கென நல்ல காட்சிகள் வேண்டும் என்பதே என் எண்ணம். சாதாரணமாக, ஒரு ஹீரோவுக்கு அருகில் நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் பெண்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.