மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் - “ஊடகங்களை தவிர யாரும் வரவில்லை”... விக்னேஷ் தரப்பு கூறுவது என்ன?
ஊடகங்களை தவிர தங்களை வந்து யாரும் பார்க்கவில்லை என சென்னை மருத்துவர் கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்னேஷின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று முன்தினம், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் குற்றவாளியாக கருதப்படும் விக்னேஷின் தம்பி லோகேஷ் தனது தாயார் பெயரில் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
ஒரு மருத்துவர் என் அண்ணனை 10 முறை மார்பில் காலால் எட்டி உதைத்தார். மருத்துவர் தாக்கப்பட்டதற்கு அனைவரும் பேசுகின்றனர். என் அண்ணன் மீதான தாக்குதலை யாரும் பேசவில்லை. என் அண்ணன் ஒரு இதய நோயாளி. அவரை மார்பில் எட்டி உதைத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
அதைவைத்துதான் புகார் அளித்துள்ளோம். என் அம்மா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஊடகங்களை தவிர யாரும் வந்து அவர்களை பார்க்கவில்லை. அரசு எனது தாயை காப்பாற்றித் தர வேண்டும். மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதையே அளிக்கமாட்டார். கீமோ சிகிச்சைக்காக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அம்மாவை மருத்துவமனையில் அனுமதிப்போம். அந்த ஒருநாளுக்காக அவரிடம் கெஞ்சுவோம்.
அவர்களின் அலட்சியத்தால்தான் தற்போது என் அம்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்” என தெரிவித்தார்.