ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இதையடுத்து சிறை சென்ற அவருக்கு கடந்தாண்டு உச்சநீதிமன்றம் ஜாமின் கொடுத்தது.
இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜாமினுக்கு எதிராக வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று(ஏப்ரல்.23) நடைபெற்றது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமின் நிபந்தனையும் அவர் மீறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, நீதிபதிகள்:-
அவர் அமைச்சராக இருந்தபோது, அவர் சமரசம் செய்த விதம் குறித்து கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை
செந்தில் பாலாஜி தரப்பு :-
சட்டபூர்வமாக ஜாமீன் கிடைத்தவுடன் தான் , அவர் அமைச்சராக பதவியேற்றார்.
நீதிபதிகள்:-
அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்று எப்படி கூற முடியும்.
நீதிபதிகள்:-
மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை
அரசியல் சாசன பிரிவு 21 ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது
செந்தில் பாலாஜி தரப்பு:-
அவ்வாறு சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், வழக்கு
விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும்
நீதிபதிகள்:-
வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும. என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.
நீதிபதிகள்:-
உங்களுக்கு ஜாமின் வழங்கிய போது நீங்கள் அமைச்சராக இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். ஆனால், ஜாமின் கிடைத்த பின்பு அமைச்சராக பதவி ஏற்றி இருக்கிறீர்கள்.
செந்தில்பாலாஜி தரப்பு :-
இந்த வழக்கில் யாரையும் influence செய்யவில்லை. அவர் அமைச்சராக இருந்து சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை, அமைச்சராக இல்லை என்றாலும் அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யமாட்டார், அப்படிப்பட்ட நபரும் இல்லை.
நீதிபதிகள்:-
உங்கள் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை.
செந்தில் பாலாஜி தரப்பு:-
தற்போது வரை நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு சாட்சி யாரும் வரவில்லை, அப்படி இருக்கையில் அவர் எப்படி அழுத்தம் கொடுத்திருப்பார்.
நீதிபதிகள்:-
நீங்கள் அவர்களை வரவிடாமல் தடுக்கிறீர்கள். ஒரு சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பது உங்களுக்கு தெரியாதா ? அரசியல்வாதிகள் ஜாமின் கிடைத்தவுடன் அதை மீறுகின்றனர். இது ஏற்க முடியாத ஒன்று.
அமைச்சராக இல்லை என்று கூறியதன் அடிப்படையில் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட நபர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என வாதம் வைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அந்தக் குற்றச்சாட்டைப் புறக்கணித்தோம். ஆனால் ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறீர்கள், அவர் மீண்டும் அமைச்சராகிறார். இது நீதிமன்றத்தை நீங்கள் கையாளும் முறை அல்ல.
செந்தில் பாலாஜி தரப்பு :-
தமிழ்நாட்டில் திமுக அரசின் காலம் இன்னும் ஒராண்டில் முடிவடையப்போகிறது. அப்போது அவரது அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணையில் செல்வாக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை.
நீதிபதிகள் :
அது அரசியல், அது குறித்து நமக்கு தெரியாது இந்த அரசு தொடருமா என்பதுசெந்தில் பாலாஜி எப்படி வழக்கில் செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது நீங்கள் இதுபோன்று சட்ட நடைமுறைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.