சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் எப்போது?
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரும் 17 ஆம் தேதி விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதன்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார்.
அவர் இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக நேற்று (மே 7) விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதாக இருந்த இந்த ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்ல இருந்தார். இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2வது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இந்த நிலையில், புதிதாக ஆக்சிஜன் குழாய் மாற்றப்பட்டு வருகின்ற 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.