#OLA நிறுவனத்துக்கு செக் வைத்த மத்திய நுகர்வோர் ஆணையம் - அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் என்ன தெரியுமா?
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆன்லைன் வாகன போக்குவரத்து நிறுவனமான OLA-வுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஓலா செயலியில் நுகர்வோர் ஏதேனும் குறைகளை எழுப்பும் போதெல்லாம், பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையின் ஒரு பகுதியாக, ஓலா ஒரு கூப்பன் குறியீட்டை மட்டுமே தற்போது வழங்குகிறது. அடுத்த சவாரிக்கே அதனை பயன்படுத்த முடியும் என்பதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்தது.
வங்கிக் கணக்கிலோ அல்லது கூப்பன் மூலமாகவோ பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பு பயணம் செய்வோருக்கு வழங்கப்படாதது நுகர்வோர் உரிமைகளை மீறுவதாகவும், அதுபோல, வழங்கப்பட்ட சேவைகளுக்கான பில் அல்லது விலைப்பட்டியல் அல்லது ரசீதை வழங்காதது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ன் கீழ் ஒரு ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை’ ஆகும். எனவே ஓலா செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகன சவாரிகளுக்கான பில்லை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்க வேண்டும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், ஓலா நிறுவன வாகனங்களில் பயணம் செய்வோர் தாங்கள் பணத்தை திரும்ப பெறவேண்டிய பணத்தை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிலோ அல்லது கூப்பன் மூலமாகவோ திரும்பப்பெறும் முறையை தேர்வு செய்ய அனுமதிக்கும் நடைமுறையை செயல்படுத்துமாறு ஓலா நிறுவனத்திற்க்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தனது சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அனைத்து வாகன சவாரிகளுக்கான Bill-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.