ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி, மதத்தை புகுத்த வேண்டாம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிகளில் எந்தவித ஜாதி மதத்தையும் புகுத்த வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ந் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லுரிலும் நடைபெறும். அதனை பார்வையிட வெளி ஊர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் செல்வார்கள்.
குறிப்பாக அவனியாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடந்து வருகின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால்
பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த போட்டியினை நடத்தியவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியை புரட்டிப்போட்ட வெள்ளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு..!
இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம்
குழுக்களை அழைத்து பேசியும் சமாதானமாகாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு
முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15ந் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
போட்டியை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமே நடத்தி
வருகிறது.
2024ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான்
நடத்துவோம் என்று பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். இதனால் அவனியாபுரத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினர்களுக்குள் பிரச்னை மற்றும்
வாக்கு வாதங்கள் ஏற்படுகிறது. இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மீது வெறுப்பு உண்டாகும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை சேர்ந்த மோகன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவனியாபுரம் கிராமத்தில் நடைபெற இருக்கிற ஜல்லிக்கட்டை, மதுரை மாவட்டநிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு
முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவிதமான சாதி, மத சாயல்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவிடனர்.