'401#' எண் - வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!
செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர், சேவை மைய பிரதி, தொழில்நுட்ப பணியாளர் என்ற பெயரில் மர்ம நபர்கள் தொடர்புகொள்கின்றனர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் அல்லது தொலைத்தொடர்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னையைச் சரி செய்ய '*401#'-ஐ தொடர்ந்து அவர்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனர். இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘சிக்கன் பீஸுடன் சைவ உணவு’… குமுறிய பயணி – பதிலளித்த ஏர் இந்தியா!
எனவே இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
'எந்த தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு *401#' என்ற எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை. அவ்வாறு டயல் செய்து , வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்'.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.