Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
11:17 AM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் கருப்பு பட்டை அணிந்து இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

"கடந்த மார்ச் 27ம் தேதி இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். வக்ஃபு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்ஃபு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது.

இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல், மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்பு பட்டையை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும். வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
cm stalinCMO TAMIL NADUMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesWaqf Amendment BillWaqf Board
Advertisement
Next Article