“திமுக ஆட்சி... பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி...”
திமுக ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்! தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி! என திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி. திமுக ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்! 38 மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள்! உள்துறை, வீட்டுவசதித்துறை, ஆதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டேரர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் செயலாளர்கள் பெண்கள்!
தொடக்கப் பள்ளிகளுக்குள் சென்று பார்த்தால், அங்குப் பெண்களே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். ஆண் ஆசிரியர்கள் ஒரு சிலர்தான் இருப்பர். மருத்துவமனைகளுக்குள் சென்றால் ஆண் மருத்துவர்களுக்கு இணையாகப் பெண் மருத்துவர்கள் உள்ளனர். நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தால் அங்கும் பெண்கள் பலர் நீதிபதிகளாக (ஜட்ஜ் ஆகத்) திகழ்வதைக் காண முடியும்.
தாசில்தார் அனுவலகங்கள், பிடிஓ அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை அலுவலகங்கள், பொதுப்பணித் துறையின் பொறியாளர் அலுவலங்கள் என எங்கு பார்த்தாலும் பெண் அலுவலர்கள் அதிகமாகப் பணிபுரிகிறார்கள். உள்ளாட்சி நிறுவனங்களைக் கவனித்தால், ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், மேயர்கள் என எங்கும் பெண்கள் அமர்ந்து ஜனநாயகக் கடமையாற்றுவதைப் பார்க்கலாம்.
3.6.1989-இல் கருணாநிதி பிறந்த நாளில், அரசாணை வெளியிடப்பட்டு, பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணிகளில் வழங்கும் பணி தொடங்கியது. அதனால்தான், எல்லா அலுவலகங்களிலும் மகளிர் 100க்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பணிபுரிந்து வருகிறார்கள். தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த மாற்றத்தைத் செய்தது திமுக அல்லவா!
அதே போல, கருணாநிதி 1996 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். சொன்னதைச் செய்யும் திமுக என்று மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எனவே, திமுகவுக்கு வாக்களித்தனர். திமுக வென்றது. கருணாநிதி நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
1989-இல் அரசுப் பணிகளில் மகளிர்க்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், தமிழ்நாட்டில் வேறு ஒரு மாபெரும் புரட்சியும் நடைபெற்றுள்ளது. எல்லா அரசு அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர். குரூப்-1 பணிகள் மூலம் அரசுப் பணிகளில்சேரும் அற்புத வாய்ப்பு கிடைத்த மகளிர் பலர் சில ஆண்டுகளில் மாநில அரசினால் பரிந்துரைக்கப்பட்டு ஒன்றியப் பணியாளர் தேர்வாணைக் குழுமத்தின் (UPSC) வாயிலாக ஐஏஎஸ் ஆகிறார்கள். அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் 323 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெண்கள் மட்டும் 96 பேர். தமிழ்நாட்டில் உள்ள உள்துறை செயலாளராக வீற்றிருப்பவராக ஒரு பெண்தான், இது தவிர காலநிலை மாற்றம், சுற்சுச்சூழல் மற்றும் வனத்துறை, வீட்டு வசதித் துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கியப் அரசுத் துறைகளின் செயலாளர்களாக பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் கருணாநிதி நடைமுறைப்படுத்திய இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சலுகையை தற்போதுதான் சில மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு அதிக எண்ணிக்கையில் மகளிர் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பெற்றுள்ளது தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி! மாபெரும் புரட்சி தானே. இப்படி மகளிர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடுகள் மூலம் கருணாநிதி வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கழகத் தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
2021 தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிப் பெண்குலம் போற்றுகிறார்கள். கல்லூரி மாணவிகள் 4 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறார். சொன்னதைச் செய்யும் தத்துவத்தைக் கொண்டுள்ள திமுக இந்த வாக்குறுதியையும் நிச்சயமாக நிறைவேற்றும் பெண்கள் பலர் எம்.எல்.ஏ. க்களாகவும், எம்.பி. க்களாகவும், வீற்றிருந்து பணியாற்றும் அருமையான காலம் அமையும்.
ஆனால், பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. 1990-ஆம் அண்டில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் மூலமாக மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுகள் வழங்கிட ஆவன செய்தார்கள். ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பாஜக அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவிகித அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள். பணிபுரிகிறார்கள். 27 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இட ஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி, முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாகப் பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும்.
மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம். நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம்”
இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.