புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் #DMK ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, சேத மதிப்பீட்டை கணக்கிட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தநிலையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேற்று (டிச.2) நாடாளுமன்றத்தில் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவை சபாநாயகருக்கு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார்.
இதேபோல், மதிமுக எம்.பி. துரை வைகோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தார். இவை தொடர்பாக அவையில் நடந்த அமளியால் அவை முடங்கியது. தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்ப்பட்டது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக எம்.பி., கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்தும், மத்திய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க அதில் கோரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.