தமிழ்நாடு முழுவதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.10) நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து அவரது உருவபொம்பையை எரித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவை காந்திபுரம் அண்ணா சிலை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் உருவபொம்பை எரிப்பு போராட்டம் நடத்தினர்.