Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாடாளுமன்றத்தில் முழங்கிய திமுக எம்.பி.க்கள்" - முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

01:27 PM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள்.

மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது. அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது.

குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?

அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்தது பாஜகவின் முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பாஜகவின் பாசிச அரசியல் ஆகும். இவ்வளவு களேபரத்திலும் – திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.

“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி - “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.ராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மத்திய அரசைத் தட்டி எழுப்பினார்கள்.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நமது உறுப்பினர்கள் அனைவர் பேச்சும் தினந்தோறும் 'முரசொலி' ஏட்டில் பக்கம் பக்கமாக வெளிவந்தது. இதனைத் தினந்தோறும் படித்தபோது மனதுக்குள் கைதட்டிக் கொண்டேன். தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் “நாற்பதுக்கு நாற்பது” என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது - “நாடாளுமன்றத்துக்குச் சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் அவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்குத் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது. அனைத்தையும் பட்டியலிடப் பக்கங்கள் போதாது என்றாலும் – குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய திமுக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் திமுக-வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள். இனியும் மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article