“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை திமுக அரசு சகித்துக் கொள்ளாது” - அமைச்சர் கீதாஜீவன்!
திருவண்ணாமலை மாவட்டம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், முட்டை கேட்ட மாணவர்களை துடைப்பத்தால் அடித்த சமையல் உதவியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, திமுக அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவனை அடித்த சத்துணவு சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும்
3.4. 2025 அன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் பசிப்பிணி போக்கிட காலை உணவுத்திட்டம் கொண்டு வந்த முதலமைச்சரின் திமுக அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.