திமுக பவள விழா - பாப்பம்மாள், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin
திமுக பவள விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்ட பாப்பம்மாள், ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
பேரறிஞர்' அண்ணா பிறந்தநாள் விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த முப்பெரும் விழா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த முப்பெரும் விழா மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில், AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். இதனை 18 இடங்களில் உள்ள எல்இடி திரைகளில் திரையிட மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டன.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்க நிகழ்ச்சி தொடங்கியது. இதன்பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. இதன்பின்னர் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பெரியார் விருது வென்ற பாப்பம்மாள் பாட்டிக்கு விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக விருதினை அவரது பெயர்த்தி ஜெயசுதா பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பிற விருதுகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருதும், அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருதும் , கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதும், விபி.ராஜனுக்கு பேராசியர் விருதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த பவழ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் விருது தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.