"திமுக அரசின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தேர்தல் ஆணையத்தின் மீது தேமுதிக மட்டும் இல்லை மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீது தேமுதிகவிற்கு மட்டும் இல்லை மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என தருமபுரியில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல படுகொலைகள் நடந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 6 படுகொலை நடந்துள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சேலம் சண்முகம் கொலை, ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினரை கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 40/40 வென்றெடுத்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் பட்டியல் சமூக மக்களுக்கு தினமும் சேதாரம் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
தேர்தல் ஆணையத்தின் மீது தேமுதிக மட்டும் இல்லை, மக்களுக்கும் நம்பிக்கை இல்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறோம். திமுகவின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளது. அடுத்த தலைமுறை பற்றியோ, எதிர்கால தமிழ்நாட்டை பற்றியோ சிந்திக்கக்கூடிய முதலமைச்சரோ, அமைச்சர்களோ, ஆட்சியோ இல்லை. தமிழ்நாட்டில் டாஸ்மார்க் கடை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். உயிரிழப்புகள் ஏற்படாது"
இவ்வாறு தெரிவித்தார்.