தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு | வெளி மாநில பிரபலங்கள் இரங்கல்!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் வெளி மாநில நடிகர்களும் விஜயகாந்த் மறைவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், தமிழ் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், வெளி மாநில நட்சத்திரங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மம்முட்டி
"விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரழிப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால்
"சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்."
நடிகர் வெங்கடேஷ் டகுபதி
" விஜயகாந்த் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சினிமா மற்றும் அரசியலில் அவரது இன்றியமையாத பங்கு நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்."
நடிகர் பவன் கல்யாண்
"புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மனைவி பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்"
நடிகர் ஜூனியர் என்டிஆர்
விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு உண்மையான அதிகார மையம். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட்
“கள்ளழகர் திரைப்படம் தான் எனது முதல் படம். இது எனக்கு லெஜண்ட் விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு, நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். RIP கேப்டன்”