#Diwali பண்டிகை எதிரொலி - பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகளை பகிர்வது, புதிய உடை உடுத்துவது உள்ளிட்டவை அடங்கும். விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் மக்கள் பலரும் உடைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். பலரும் தங்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
பண்டிகை நாட்களில் பூக்களும் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் பூக்கடை சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2000 க்கும், குண்டு மல்லி ரூ.1150 க்கும் , முல்லை ரூ.900-க்கும், சாமந்தி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.160-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், சாதி முல்லை ரூ.640-க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்துக் குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், சென்னையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி தாம்பரம் பூச்சந்தையில் மல்லி ஒரு கிலோ ரூ,2,500-க்கும், முல்லை ஒரு கிலோ ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் விலையை பொருட்படுத்தாமல் பலரும் பூங்களை வாங்கி செல்கின்றனர்.