முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!
கோவையில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஈர நெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள்
உள்ளனர். பல்வேறு குடும்ப சூழ்நிலைகளால் ஆதரவற்ற முதியோர்கள் இங்கே தங்கவைக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு சில சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.
தீபாவளி திருநாளையொட்டி இம்முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. புத்தாடைகளுடன் இனிப்புகளும், உணவும் வழங்கப்பட்டன. முதியவர்கள் மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசு வகைகளை கொளுத்தி மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினர்.
இந்த தீபாவளி கொண்டாட்டம் குறித்து முதியவர்கள் கூறும் பொழுது “ இங்கு உணவு உடை தருவதால் மிக மகிழ்ச்சியோடு இருக்கிறோம். தீபாவளி அன்று மத்தாப்பு, புஷ்வானம் உள்ளிட்ட பட்டாசு வகைகளை வெடித்து மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடினோம். எங்களுக்கு யாருமில்லை என்ற ஏக்கமே இல்லாத வகையில் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினோம்” என அவர்கள் தெரிவித்தனர்.