#Diwali | தமிழ்நாட்டில் பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு… வெளியான தகவல்!
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று (அக்.31) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடினர். பலவகையான பட்டாசுகளை மக்கள் வெடித்து மகிழ்ந்த நிலையில், வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்தன.
இதையும் படியுங்கள் : #GoldRate | தங்கம் விலை சற்று குறைவு… எவ்வளவு தெரியுமா?
தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பிலும், பல்வேறு சமூக நல அமைப்புகள் மூலமும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், தமிழ்நாட்டில் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டன. நேற்று தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு விபத்து தவிர்த்த பிற தீ விபத்துகள் 31 இடங்களில் ஏற்பட்டது என்றும், பட்டாசு விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்ததாகவும் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.