தவிக்கும் வயநாடு: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!
கேரளாவின் வயநாட்டில் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து 50 பேர் கொண்ட குழுவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 48 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. 96 பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் 32 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேரிடரின் ஒருபகுதியாக 45 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 3,069 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.