இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்!
இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா நடவடிக்கை எடுத்துள்ளார்.
68 உறுப்பினர்களைக் கொண்டஇமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். 3 பேர் சுயேச்சை எம்எல்ஏக்கள். முன்தினம் (27ஆம் தேதி) நடந்த ஒரு மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் சுயேச்சை ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே, மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியில் இருந்து விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் சிம்லாவில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸின் 6 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் அறிவித்துள்ளார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 பேர் விவரம்:
ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லக்கன்பா, தெய்வேந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சேத்தன்ய சர்மா ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.