தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்திற்கு இயக்குநர் செல்வராகவன் பாராட்டு!
கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
தனுஷின் 50-வது படமாக உருவான ‘ராயன்’ திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தனுஷ் 'குபேரா' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கினார். இதற்கிடையே, தனுஷ் தனது 52வது படத்தை தானே இயக்கி நடித்தார்.
இத்திரைப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்ட்டது. இது தனுஷ் இயக்கிய 4வது படமாகும். டாவ்ன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குநரும், தனுஷின் சகோதரருமான செல்வராகவன் 'இட்லி கடை' திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
"இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி!"
இவ்வாறு இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.