விடாமுயற்சி ஷூட்டில் விபத்து – புகைப்படத்தை பகிர்ந்து IPS அதிகாரி சொன்ன அறிவுரை!
விடாமுயற்சி ஷூட்டில் நடந்த விபத்து புகைப்படத்தை பகிர்ந்து IPS அதிகாரி ஸ்டாலின் சொன்ன அறிவுரையை வைரலாகி வருகிறது.
அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. தற்போது இந்தப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தாலும், சீக்கிரமே மீண்டும் அஜர்பைஜான் செல்கிறது படக்குழு. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் 60 சதவிகிதம் வரை முடிந்துவிட்டது.
இந்த நிலையில் தான் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் கார் ஆக்ஸிடெண்ட் ஆன வீடியோ நேற்று வெளியானது. அதில், அஜித் ட்ரைவிங் செய்ய அவரது அருகே ஆரவ் உள்ளார். இருவரும் பயணிக்கும் அந்த கார் தறிகெட்டு தாறுமாறாக ஓடி திடீரென சாலையின் ஓரம் தலைகுப்புற கவிழ்கிறது. விபத்து நடந்ததும் “Are u ok… Are u ok..” என ஆரவ்-இடம் அஜித் பதற்றத்துடன் கேட்கிறார். இது 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற விபத்தாக இருந்தாலும், இப்போது ஏன் இந்த வீடியோ வெளியானது என்ற சந்தேகம் எழுந்தது.
விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது ரியலாகவே இந்த விபத்தில் அஜித், ஆரவ் இருவருக்கும் பெரிதாக காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. ஆக்ஸிடெண்ட் ஆனது ஹம்மர் ரக கார் என்பதால், அஜித்தும் ஆரவ்வும் எஸ்கேப் ஆகிவிட்டனர். இந்நிலையில், விடாமுயற்சி படம் ட்ராப் ஆகிவிட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளதாம்.
இதுபற்றி அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அஜித் சார் கார் வேகமா ட்ரைவ் பண்ணும் போது ஸ்கிட் ஆகி பள்ளத்துல கவிழ்ந்ததும் மொத்த யூனிட்டும் பதறிடுச்சு. இந்த வீடியோவ இப்ப ரிலீஸ் பண்ண காரணமே பலரும் படம் ட்ராப் ஆகிட்டதா சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இப்படிலாம் ரிஸ்க் எடுத்து நடிச்சிட்டு வர்ற அஜித் சார் உட்பட விடாமுயற்சி படத்திற்காக உழைக்கும் அத்தனை பேருக்கும் மனசு கஷ்டமா இருக்குது. அதனால் படக்குழு, ரசிகர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கொடுக்க தான் இந்த வீடியோ என கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விபத்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ’வாகனத்தில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அவசியம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அஜித் சீட் பெல்ட் அணிந்துள்ளார் என்பதும் அவரது அருகில் உட்கார்ந்திருந்த ஆரவ் தான் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததை சுட்டிக்காட்டியே ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் இவ்வாறு பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் அவர்களின் இந்த பதிவுக்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.