Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

09:44 AM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த கூகுள் நிறுவனத்தின் பதிலை ஏற்க மறுத்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வது டிஜிட்டல் தளங்களின் சட்டபூர்வ கடமை என அந்நிறுவனத்தை சாடியுள்ளார்.

Advertisement

சாட்ஜிபிடி-க்கு போட்டியாக பல்வேறு டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் கூகுளின் ’ஜெமினி’ சாட்பாட் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அண்மையில், இனபேதம் அடிப்படையில் ஏஐ படங்களை வழங்குவதாக ஜெமினி குற்றச்சாட்டுக்கு ஆளானது. அடுத்தபடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தான ஒருதலைப்பட்சமான கருத்தினை வெளியிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியது.

ஜெமினி ஏஐயிடம் ‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாசிஸ்டா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்தும் அதே கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த தளம் சாமர்த்தியமாக பதில் அளித்தது. ஆனால் பிரதமர் மோடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘பாஜகவின் இந்து தேசிய சித்தாந்தம், எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை’ உள்ளிட்டவற்றை முன்வைத்து மோடி குறித்து ஆட்சேபகரமான பதிலை ஜெமினி தந்தது. இவை சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும் இந்திய அரசின் கவனத்துக்கும் ஆளானது.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சரான ராஜிவ் சந்திரசேகர், கூகுளின் ஜெமினி அளித்த பதில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்று எச்சரித்தார்.

இதற்கு கூகுள் தரப்பு உடனடியாக அளித்த விளக்கத்தில், ”ஜெமினி ஒரு படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் கருவியாக உள்ளது. தற்போதைய நிகழ்வுகள், அரசியல் தலைப்புகள் அல்லது செய்திகள் பற்றிய சில தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும்போது நம்பகமானதாக இருக்காது" என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜெமினியை தொடர்ந்து மேம்படுத்துவதில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், கூகுளின் பதிலை ஏற்காத மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

“மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் நேர்மறையான டிஜிட்டல் சூழலில் பங்குகொள்ளும் இந்திய குடிமக்களை, நம்பகத்தன்மை இல்லாத தளங்கள் மூலம் பரிசோதனை செய்யக் கூடாது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வது டிஜிட்டல் தளங்களின் சட்டபூர்வ கடமை. அந்தத் தளங்கள் நம்பகமானதல்ல என்று கூறி சட்டத்திட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்று ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கு திரும்பக் கூறுகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

Tags :
aiDigital NagriksGemini AIGOIgoogleIT RulesNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaRajeev chandrasekhar
Advertisement
Next Article