மேஜிக்கில் மிரட்டினாரா யோகி பாபு? 'ஜோரா கைய தட்டுங்க' படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்!
ஒரு பிரபல மேஜிக் கலைஞரின் வாரிசு யோகிபாபு. தந்தை தனது தவறால் இறந்தபின், அவரும் மேஜிக் செய்கிறார். ஆனால், அவரால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. பொதுமக்கள் திட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் மேஜிக்கால் ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கே துவைத்து எடுக்கிறார்கள். அங்கிருந்து ரிலீஸ் ஆகும் சமயத்தில் அவர் கையை வெட்டுகிறது ஒரு ரவுடி கும்பல்.
கையில் அடிப்பட்ட நிலையில், மேஜிக் செய்யாமல் தவிக்கும்போது, அவருக்கு நெருக்கமான ஒரு சிறுமியையும் அந்த கும்பல் கொலை செய்ய, தனது மேஜிக் திறமையை பயன்படுத்தி அந்த கும்பலை சேர்ந்தவர்களை எப்படி கொலை செய்கிறார் யோகிபாபு, போலீஸ் அவரை பிடித்ததா? என்பதுதான் ஜோரா கையை தட்டுங்க கதை. வினீஷ் மில்லினியம் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மலையாள படம் மாதிரி காட்சிகள் மெதுவாக நகர்கிறது. மேஜிக் கலைஞராக கஷ்டப்படும் யோகிபாபுவின் வாழ்க்கை, அவர் படும் வேதனை, கோபத்தை இப்படம் விவரிக்கிறது.
அவர் கதை நாயகன் என்பதால் அதிக காமெடிக்கும் வாய்ப்பு இல்லை. மேஜி்க் சம்பந்தப்பட்ட காட்சிகள், யோகிபாபு வீடு சம்பந்தப்பட்ட திரில்லர் சீன்கள், அவர் எப்படி கொலை செய்கிறார் போன்ற காட்சிகள் ஓகே. யோகிபாபுக்கும், அவர் தந்தைக்கும் இடையேயான காட்சிகள் டச்சிங்காக அமைந்துள்ளது. மற்றபடி, கதையில் பரபரப்பு இல்லை. போலீசாக வரும் ஹரீஷ்பெராடி மட்டும் பரபரப்பாக இருக்கிறார். சில காட்சிகள் நாடகத்தன்மை அதிகமாக உள்ளது.
புகழ் பெற்ற மதுஅம்பாட் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பிளஸாக அமைந்துள்ளது. அப்பு கமல்ஹாசன் பாணியில், யோகிபாபு செய்கிற கொலை மட்டுமே படத்திற்கு ஆறுதல். ஹீரோயினாக சாந்தி ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார். வழக்கமான வில்லன், வழக்கமான போலீஸ். யோகிபாபு படம் என்றால் காமெடி இருக்கும். ஜோரா கைய தட்டலாம் என்று சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.