கைக்கொடுத்ததா ஷங்கர் - ராம் சரண் காம்போ? ‘கேம் சேஞ்சர்’ திரை விமர்சனம்!
தில் ராஜ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ அனைவரது பாராட்டுகளையும் பெற்று, தனக்கென ஒரு அடையாளத்தை அமைத்துக் கொண்டாதா என்பதை இத்திரை விமர்சனத்தில் காண்போம்.
நேர்மையான அரசு அதிகாரிக்கும், ஊழலில் உழன்று கிடக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் போர்தான் கேம் சேஞர் திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஆந்திராவின் முதலமைச்சராக வரும் போபிலி சத்யா, தனது ஆட்சியில் நடக்கின்ற ஊழல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தரமுன்வரும் போதுதான், அவருடைய மகனான எஸ்.ஜே சூர்யா(மோபி) ஊழல் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது என வில்லனாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் தனது சொந்த மாவட்டமான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார் குளோபல் ஸ்டார் ராம் சரண்(ராம் நந்தன்). ஊழலே இருக்கக்கூடாது என்று, அரசை சுத்தமாக்கும் செயலில் ஈடுபடும் ராம் நந்தன் ஆளுங்கட்சியின் பின்புலமாக திகழும் ரவுடிகளை பந்தாடுகிறார். இது அமைச்சர் மோபிக்கு (எஸ்.ஜே.சூர்யா) கடும் சவலாக அமைய, இந்த புள்ளியிலிருந்து ராம் சரணுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையேயான அரசியல்வாதி – அரசு அதிகாரி போர் ஆரம்பமாகி அது எங்கு கொண்டு போய் முடிகிறது என்பது தான் கேம் சேஞ்சரின் புதுமையான (ஆதிகாலத்து ) மிச்சக்கதை.
கதாநாயகனாக வரும் ராம் சரண் தன்னால் முடிந்த அளவிற்கு கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாவட்ட ஆட்சியராக வரும் காட்சிகளில் மாஸ் தோரணை கலந்திட்ட அதிகாரியாகவும், வில்லன்களை வானத்திற்கு பறக்கடிக்கும் போது ஆக்ஷனில் மிகவும் ஸ்டைலாகவும் படம் முழுவதும் வருகிறார். ராம் சரண் மாவட்ட ஆட்சியராக மாறுவதற்கு காரணமாக இருந்த கதாநாயகி கியாரா அத்வானிக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் கதாநாயகி என்ற கட்டாயத்தின் பேரில் வந்து போகிறார்.
கல்லூரி நாட்களில் நடக்கும் காதல் காட்சிகளில் ஒரு துளியேனும் கூட காதல் உணர்வோ அல்லது காதல் தன்மையோ வெளிப்படுத்தப்படவில்லை. படத்தின் முதல் பாதி, காதல் காட்சிகள் மற்றும் அவ்வப்போது ரவுடிகளுக்கும், ராம் சரணுக்கும் நடக்கும் சண்டை காட்சிகளிலே சென்று விடுகிறது. முதல் பாதி முன், போபிலி சத்யா ( முதலமைச்சர்), அஞ்சலி மற்றும் ராம் சரண் என மூவரும் ஒரே மேடையில் சந்திக்கும் காட்சியில் மூவருக்கும் கடந்த காலத்தில் தொடர்பு இருக்கிறது என இரண்டாம் பாதிக்கு லீடு கொடுக்கப்படுகிறது.
இடைவேளைக்கு பிறகு வரும் சமூக போராளியான ராம் சரணுக்கு, பேச்சு குழறும் பாதிப்புடன் மலைவாழ் மக்களுக்காக போராடும் ஒரு நேர்மையான கதாபாத்திரம், அவருக்கு மனைவியாக வரும் அஞ்சலியும் நல்ல நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். பிளாஷ்பேக் பகுதி ரசிக்கும் படியாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை யூகிக்கும் அளவிலே காட்சிகள் நகர்கிறது. இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யா, ராம் சரண் மோதிக்கொள்ளும் காட்சிகளில் வசனங்கள் ஏதும் எடுபடவில்லை.
திரும்ப திரும்ப “நான் யார் தெரியுமா?, என்னோட பவர் என்ன தெரியுமா?” என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனங்கள் சோர்வையும், சலிப்பு தன்மையை மட்டுமே தருகிறது. மாநாடு முதல் வில்லன் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் எஸ்.ஜே.சூர்யா, ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் வில்லத்தனம் செய்யும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு தேர்தல் அதிகாரியான ராம் சரண் தரும் இன்னல்கள் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது.
தேர்தல் அதிகாரியின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நம்பகத்தன்மை அற்ற காட்சிகளால் ரசிகர்களை ஏமாற்றுகிறார் ஷங்கர். படத்தில் நம்பகத்தன்மை என்பது எந்த காட்சியிலும் இல்லை என்பதுதான் இப்படத்திற்கான பெரிய மைனஸ். ஊழலற்ற சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே கதையை வெவ்வேறு கதாபாத்திரம் மூலம் சொல்கிறார் ஷங்கர்.
படத்திற்கு ஆறுதலான விஷயம் என்பது தமனின் பின்னணி இசையும், பாடல்களும் மற்றும் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் தான். கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள கதைக்கு, மிகவும் பழமையான திரைக்கதை, சுவராஸ்யம் இல்லாத வசனங்கள், இயக்கம் படத்தின் பின்னடைவுக்கு காரணமாக இருக்கிறது. இனி வரும் திரைப்படங்களில் புதுமையான கதை, திரைக்கதைக் கொண்ட படங்களை இயக்க ஷங்கர் சேஞ்ச் ஆக வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
- சு.காட்சன் கிருபாகரன், நியூஸ்7தமிழ்.