பெரியார் ஆதரவாளர்களே பெரியாரின் புகைப்படத்தை காலணியால் அடித்தனரா?
This News Fact Checked by ‘Telugu Post’
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்தும், திராவிட கொள்கைகள் குறித்தும் சமீபத்தில் பேசியது பெரியார் ஆதரவாளர்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது.
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.
தொடர்ந்து கடந்த ஜன.22ஆம் தேதி சீமானின் வீட்டின் முன் குவிந்த பெரியாரிய உணர்வாளர்கள் வீட்டை முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து பெரியார் உணர்வாளர்களே, பெரியாரின் உருவப்படத்தை செருப்பால் அடிப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சிலர், “திமுகவினரே தங்கள் சொந்த கட்சியின் கொள்கைத் தலைவரை அவமதித்துள்ளனர்” என்ற கருத்தினை பதிவிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
உண்மை சரிபார்ப்பு;
சமூக ஊடக பக்கங்களில் பரவிவரும் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து Telugupost தகவலாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், திமுக ஆதரவாளர்கள் பெரியாரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தனர் என பரவும் செய்தி பொய் என கண்டறியப்பட்டது. இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் பயன்படுத்தி தேடிய போது, நீலாங்கரையில் சீமான் வீட்டின் முன், பெரியார் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான காணொளிகளை கிடைத்தது.
இந்த செய்தியினை சன் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த செய்தி தொகுப்பில் திராவிட கொள்கை ஆதரவாளர்கள் சீமான் உருவப்படம் அடங்கிய பதாகைகளை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் வைரல் காணொளியின் முக்கிய ஃபிரேம்களை எடுத்து அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, அதில் சீமான் இருப்பதும், பெரியார் புகைப்படம் அங்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான சில பதிவுகளும் எக்ஸ் வலைத்தளப் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில், Oneindia Tamil-ல் வெளியிடப்பட்டிருந்த, சீமான் வீட்டின் முன்பு பெரியார் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பான வீடியோ கிடைத்தது.
அந்த வீடியோவில் சீமானின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பரப்பப்படும் மற்றும் உண்மை படத்தின் ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவு;
ஆய்வுகளின்படி, திராவிட கொள்கையாளர்கள் மற்றும் பெரியார் ஆதரவாளர்களால் தந்தை பெரியாரின் உருவப்படம் தாக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. எனவே எக்ஸ் வலைத்தளத்தில் பெரியார் படம் தாக்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.