தெலங்கானாவில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கினார்களா? - வைரல் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’
ஹைதராபாத்தில் வகுப்புவாத வன்முறையைக் காட்டுவதாகக் கூறும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கட்டிடத்தில் ஒரு கும்பல் ஏற முயற்சிப்பதையும், மற்றொருவர் அதன் நுழைவாயிலை உடைக்க முயற்சிப்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோவைப் பகிர்பவர்கள், ஹைதராபாத்தில் உள்ள இந்து குடும்பங்களின் வீடுகளுக்குள் ஒரு கும்பல் நுழைய முயற்சிப்பதை காட்டுகிறது என்று எழுதியிருந்தனர்.
"இந்தக் காட்சி ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டதல்ல மாறாக தெலங்கானாவிலிருந்து நடந்தது” என்ற வாசகங்களுடன் அவர்கள் இந்துக்களின் வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைகிறார்கள்" என்ற தலைப்புடன் இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நம் நிலைமை காஷ்மீரில் உள்ள இந்துக்களின் நிலைமையைப் போல மாறும்." (காப்பகம்) எனவும் இந்த பதிவின் கூற்றின் தெரிவித்திருந்தனர்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்தது. இந்த வீடியோ தெலங்கானாவில் இருந்து அல்ல, பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்கும் நம்பகமான அறிக்கைகள் அல்லது சமூக ஊடக பதிவுகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. வைரல் வீடியோவில் உள்ள நிகழ்வுகள் தொடர்பாக தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெறும் எந்தவொரு வகுப்புவாத சம்பவம் பற்றிய செய்தி அறிக்கைகளையும் நாங்கள் காணவில்லை.
வீடியோவின் கீஃப்ரேம்களின் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி தேடியபோது ஆகஸ்ட் 25, 2022 அன்று ஒரு X பயனரால் பகிரப்பட்ட வைரல் வீடியோவைக் கண்டறிந்தோம். "பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் உள்ள சதரில் உள்ள ராபியா மையத்தில் ஒரு இந்து துப்புரவுத் தொழிலாளி #அசோக்குமார் ஒரு பொய்யான வழக்கில் வேட்டையாடப்பட்டார். அந்தப் பகுதியில் மொத்தம் 18 இந்துக்கள் வசிக்கின்றனர், அப்பகுதியைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க முயன்றனர்” என்ற தலைப்புடன் வீடியோ பதிவேற்றப்பட்டது.
முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடியபோது, ஆகஸ்ட் 22, 2022 அன்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஒன்றைக் கண்டறிந்தோம், அதில் வைரலான வீடியோவில் உள்ளதைப் போன்ற பல்வேறு காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது என்றும், இந்த சம்பவம் ஆகஸ்ட் 2022 இல் நடந்தது என்றும் அறிக்கை உறுதிப்படுத்தியது.
"உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, பாகிஸ்தானில் உள்ள ஒரு இந்து துப்புரவுத் தொழிலாளி மீது குர்ஆனை அவமதித்ததாகக் கூறி போலி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அசோக் குமார் என அடையாளம் காணப்பட்ட தொழிலாளியைப் பிடிக்க ஒரு அடுக்குமாடி கட்டிடத்தைச் சுற்றி கூடியிருந்த ஒரு கும்பலை போலீசார் கலைக்க வேண்டியிருந்தது," என்று அந்த அறிக்கை கூறியது.
பாகிஸ்தானிய பத்திரிகையாளரும் கட்டுரையாளருமான நைலா இனாயத்தின் ட்வீட் செய்தி அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
" குர்ஆனை அவமதித்ததாகக் கூறி இந்து துப்புரவுத் தொழிலாளி அசோக் குமார் மீது 295B பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடைக்காரர் பிலால் அப்பாசியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு வந்தது, பின்னர் அவர் குமார் மீது புகார் அளித்தார்" என்று நைலா இனாயத் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
அவரைப் பிடிக்க ஒரு கும்பல் கட்டிடத்தைச் சுற்றி கூடியதாகவும், ஆனால் உள்ளூர் காவல்துறையினர் கூட்டத்தை சரியான நேரத்தில் கலைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் முடிவு செய்கிறது. இந்த வீடியோ ஹைதராபாத்தில் இருந்து அல்ல பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.