ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஜோக்கர்-2?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜோக்கர்-2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஜோக்கர்’. டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரமான ஜோக்கரை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் 2 ஆஸ்கர்களை வென்றது. இதன் 2-ம் பாகம் உருவாகிறது என்ற அறிவிப்பே ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆர்வத்தை தூண்டியிருந்தது. தொடர்ந்து Joker : Folie à Deux படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்.2ஆம் தேதி ஆங்கிலத்தில் இப்படம் வெளியானது. முந்தைய பாகத்தில் இருந்த நேர்த்தியும், சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பும் இந்த படத்தில் இல்லை என்பதால் இப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்படம் தமிழில் இன்று வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை என்றே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல வசூலிலும் சொதப்பியுள்ளது. முதல் பாகம் உலகம் முழுவதும் சாதனை புரிந்த நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 40 மில்லியன் டாலர்களை தாண்டவே திணறிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.