தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!
மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா என்னை அழைத்தார் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அவரை அழைத்த அமித்ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார்.
இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது, அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது. இந்தக் காட்சிகள்
அனைத்தும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் பேசினோம் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது :
"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதன்முதலாக சந்தித்தேன். தேர்தலில் நான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கவே இந்த விளக்கம்"
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.