மகாசிவராத்திரி அன்று சதம் விளாசியதால் ஆப்கா. வீரர் சத்ரான் சிவபெருமானை கைகூப்பி வணங்கினாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’
பிப்ரவரி 26, 2025 அன்று, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இது சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இதன் மூலம் பென் டக்கெட்டின் முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.
இதற்கிடையில், சத்ரான் தனது சதத்தைக் கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் அவர் சைகை செய்வதையும், அதைத் தொடர்ந்து கைகளைக் கூப்பி வாழ்த்துவதையும் காட்டுகிறது. மகாசிவராத்திரி அன்று போட்டி நடந்ததிலிருந்து, சத்ரான் சிவபெருமானின் தெய்வீக கருவியான தம்ருவை வாசித்து, கைகளைக் கூப்பி பிரார்த்தனை செய்தார் என்ற கூற்றுடன் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
X இல் இதே போன்ற ஒரு இடுகையின் காப்பகத்தை இங்கே காணலாம்.
உண்மைச் சரிபார்ப்பு :
சத்ரானின் சைகைகள் பிரார்த்தனைகள் அல்லது மகாசிவராத்திரியுடன் தொடர்புடையவை அல்ல என்பதால், இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்தது. தொடர்புடைய முக்கிய வார்த்தை தேடல்களை நாங்கள் மேற்கொண்டோம். அதில் சத்ரானின் கொண்டாட்டத்தை மகாசிவராத்திரியுடன் இணைக்கும் நம்பகமான ஊடக அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், பிப்ரவரி 27 அன்று கிரிக்கெட் டைம்ஸ் வெளியிட்ட "இங்கிலாந்துக்கு எதிராக சதம் முடித்த பிறகு இப்ராஹிம் ஜத்ரான் தனது கொண்டாட்டத்திற்கான காரணத்தை விளக்குகிறார்" என்ற தலைப்பில் வெளியான செய்தி இந்த சைகை குறித்து தெளிவுபடுத்தியது.
இந்த செய்தி அறிக்கையின்படி, தனது ஆறாவது ஒருநாள் சதத்தை எட்டிய பிறகு, சத்ரான் ஒரு தனித்துவமான சைகையுடன் கொண்டாடினார் லெக்-ஸ்பின் பந்துவீச்சைப் பின்பற்றி, பின்னர் டிரஸ்ஸிங் அறையை நோக்கி நன்றி தெரிவிக்கும் விதமாக கைகளை கூப்பினார். இந்த கொண்டாட்டம் அவரது அணி வீரர் ரஷீத் கானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருந்தது.
இன்னிங்ஸ் இடைவேளையின் போது, சத்ரான் தனது கொண்டாட்டத்திற்கான காரணத்தை விளக்கினார், போட்டிக்கு முன்பு ரஷீத்துடன் பேசியது தன்னை ஒரு வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தூண்டியது என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
ரஷீத் கான் ஒரு லெக் ஸ்பின்னர் என்பதால், சத்ரான் தனது எதிர் கடிகார திசை சைகை மூலம், டிரஸ்ஸிங் அறையில் ரஷீத்தின் கவனத்தை ஈர்க்க முயன்றார் என்பது தெளிவாகிறது. பின்னர் அவர் கூப்பிய கைகளால் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி 26 அன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்ட ஒளிபரப்பாளரிடம் சத்ரான் பேசும் வீடியோவை நாங்கள் கண்டோம், அதில் "இப்ராஹிம் சத்ரான் தனது மைல்கல் சதத்தை எட்டிய பிறகு வந்த 'அந்த' சிறப்பு சைகையை பற்றி விளக்குகிறார்" என்ற தலைப்புடன் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோவில் சத்ரானின் கொண்டாட்டத்தின் கிளிப்புகள் மற்றும் அவரது விளக்கங்கள் உள்ளன, அதில் அவர், "விளையாட்டுக்கு முன்பு, நான் ரஷீத்துடன் பேசினேன். நான் அவருடன் பேசும் போதெல்லாம், நான் அதிக ரன்களை எடுக்கிறேன். அதனால்தான் நான் என் சதத்தை எட்டியபோது, ரஷீத்திற்கு நன்றி தெரிவித்தேன்" என்று கூறுகிறார்.
எனவே, இந்தக் கூற்று தவறானது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.