மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்!
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார், தொடர்பாக விசாரிக்க, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு அம்மாநில போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார்.
இதனிடையே, திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார். ராஜ்பவன் வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளார். நிரந்தர வேலை கொடுப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை மானபங்கம் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள குழு அடுத்த சில நாட்களில் விசாரணை நடத்தவுள்ளது. வழக்கு தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் இருந்தால் அவற்றை வழங்குமாறு கேட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்குப் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின் போது அங்கீகரிக்கப்படாத, முறைகேடான, ஏமாற்று மற்றும் தூண்டுதல் பேரில் விசாரணைகளை நடத்தும் போர்வையில் போலீஸார் ஆளுநர் மாளிகையில் நுழைவதற்கு ஆளுநர் ஆனந்த போஸ் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.