பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை!
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 பிரபல துணிக்கடைகளில் கடந்த ஜன.3ம் தேதி வழக்கம் போல உரிமையாளர்கள் கடையை அடைத்து சென்றனர். மறுநாள், ஜன.4ம் தேதி கடையைத் திறந்த உரிமையாளர்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஒரு கடையில் ரூ.6 லட்சம் மற்றொரு கடையில் 1.95 லட்சம் என மொத்தம் 7.95 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
துணிக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று, காலை தருமபுரி நெசவாளர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் முகமூடி அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அவரை விசாரித்ததில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் (37) என்பது தெரியவந்தது. இரண்டு கடைகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில் இருப்பது ஆனந்த் என்பதைக் காவல் துறையினர் உறுதி செய்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,மற்றும் வேலூர், சேலம்,போன்ற பல பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் ஆனந்த் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 40 திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.