தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.
இதில் 11 -ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். அந்த வகையில், இவ்விழா கடந்த 20ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்றது.
திருவிழாவின் 11ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச விழா நேற்று இரவு
கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி தருமபுர ஆதீனம் ஆபரணங்கள் அணிந்த நிலையில், சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.