விடுமுறை தினத்தையொட்டி #Tiruchendur சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய
சுவாமி கோயிலானது சிறந்த பரிவார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு
வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
மேலும் விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது. இன்று கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா.. - #TVKVijay
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் வாகனங்கள் ஆங்காங்கே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் உள்ளூர் வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை
வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து
வருகின்றனர்.