கருவின் வயதை கண்டறிய 'கர்ப்பிணி-ஜிஏ2' மாதிரி உருவாக்கம்! - சென்னை ஐஐடி சாதனை!
கர்ப்ப காலங்களில் கருவின் வயதை துல்லியமாக கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
கர்ப்ப காலங்களில் பிரசவ தேதியை சரியாக கணிப்பதற்கும், கர்ப்பிணிகளின் உடல்நலன் பற்றி தெரிந்து கொள்வதற்கும் அந்த கருவின் வயதை துல்லியமாக கணக்கிடுவது முக்கியமானது. தற்போதைய காலத்தில், மீயொலிப் பரிசோதனையை பின்பற்றி கர்ப்பமுற்றிருப்பதைத் தீர்மானிக்கவும்,கருவின் வயது தீர்மானிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : WPL 2024 டி20 தொடர் – முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!
மீயொலிப் பரிசோதனை செய்வதன் மூலம் கர்ப்பகாலத்தில் சிசுவிற்கு இருக்கக்கூடிய சில நோய்நிலைகளை அறியவும், குழந்தை பிறக்கும் நாளை அறிந்துகொள்ளவும் முடியும்.
ஆனால், கருவின் வளர்ச்சியில் மாறுபாடு இருக்கும் நிலையில், இந்த கணக்கீடு தவறாக அமையவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் வயதை துல்லியமாக கண்டறியும் வகையில், சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்ப துறை, ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள 'திஸ்டி' மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உயர்நிலை ஆராய்ச்சிக்கான குழுவை அமைத்தது. ஆராய்ச்சியில் 'கர்ப்பிணி-ஜிஏ2' எனப்படும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 3 மாத கருவின் வயதை கண்டறிவதற்காக இந்த மதிப்பீட்டு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஐடி உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஹிமான்சு சின்ஹா கூறியதாவது :
"இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, குறைப்பிரசவம் என்பது சாதாரண 40 வார காலத்துடன் ஒப்பிடும் போது, கர்ப்பத்தின் 37வது வாரத்திற்கு முன் பிறக்கும் குழந்தை என கூறப்படுகிறது. இந்தியாவில், 2020 - 2021 ஆம் ஆண்டில் பிரசவ காலத்திற்கு முன்கூட்டிய பிறக்கும் குழந்தைகளை எண்ணிக்கை 13% ஆக இருந்தது.
பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பை வழங்குவதற்கும், பிரசவ தேதியை நிர்ணயிப்பதற்கும் துல்லியமான கர்ப்ப பரிசோதனை முக்கியமானது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் கடைசி மாதவிடாய் காலத்தின் அடிப்படையில் ஆரம்பக் கணக்கீடுகளைச் செய்து வருகின்றனர். துல்லியமாக இந்தியக் கருவின் வயதை கணிக்கும் கருவிகளை உருவாக்க முயன்று வருகிறோம். அதற்கான முதல் முயற்சி தான் இது"
இவ்வாறு ஐஐடி உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஹிமான்சு சின்ஹா தெரிவித்தார்.