“நட்சத்திர அந்தஸ்து இருந்தும் ரஜினி துளியும் மாறவே இல்லை” - நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி!
‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து, அமிதாப் பச்சன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, தற்போது படக்குழுவினர் மும்பையில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது, அமிதாப்பச்சனுடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (மே 3) நடந்து வரும் படப்பிடிப்பில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இருவருமே மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் கோட் சூட் அணிந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன், “தல ரஜினியுடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமையும் பாக்கியமும் அடைகிறேன். மிகச்சிறந்த நட்சத்திர அந்தஸ்து இருந்தபோதும் அவர் துளியும் மாறவே இல்லை. அதே எளிமையுடனும் அடக்கத்துடனும் சாதாரணமாகவே இருக்கிறார்” என்று வியந்து குறிப்பிட்டுள்ளார்.