கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
"காய்ச்சல் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. எனவே தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய பகுதிகளில் அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம். எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளை தடுக்க காய்ச்சல் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பருவமழை பெய்து வரும் சூழலில் கர்நாடகாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையோர மாவட்டங்களின் சுகாதாரத்துறை அலுவலர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- எல்லை மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்/மருந்தகங்கள்/அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும்.
- அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பொது சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து அனைத்து காலி இடங்களையும் சுத்தம் செய்யவும், கொசுவின் இனப்பெருக்க ஆதாரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க குளோரினேஷன் செய்வதை உறுதிசெய்யவும்.
- அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்களில் "ஏடிஸ் இல்லாததாக" மாற்றுவதை உறுதிசெய்யவும்.
- மருத்துவமனைகளில் தற்போதுள்ள பிரத்யேக காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- காய்ச்சல் / டெங்குவினால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், அவசர காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனையில் பிளேட்லெட் மாற்றுவிற்கான நோயறிதல் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் பிளாஸ்மா பிரிப்பான் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்யவும்.
- எல்லையில் உள்ள நிலவரத்தை அப்டேட் செய்யவும், ஆரம்பகால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எல்லையோர மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
- பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் வளாகங்களில் கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக அறுவுறுத்த வேண்டும்.
- மாவட்ட சுகாதார அலுவலர்கள் சரியான நேரத்தில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கவும், எல்லையோரப் பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.