டெங்கு, மலேரியா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அதிமுக ஆட்சியில் புயல், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டிருந்தால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்க மாட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அப்போலோ, எம்.ஜி.எம், காவேரி, மெட்வே, ஸ்ரீ ராமச்சந்திரா, கற்பக விநாயகா, பில்ரோத் ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்தும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், மருத்துவ நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதியிலிருந்து 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயங்கி வருகிறது.
பருவமழை தொடங்கியிலிருந்தே மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. வரலாற்றிலேயே அதிகளவு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். இன்னும் மூன்று வாரங்கள் மருத்துவ முகாம்கள் நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் தொடர்ச்சியாக மாலை 4 மணி வரை நடைபெறும்.
டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவ முகாம்களை செயல்படுத்தி வருகிறோம். சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
இதையும் படியுங்கள் : இஸ்ரேல் - ஹமாஸ் போர் : காஸாவில் 17,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை..!
வெறும் கரண்டியை சுற்றுவது சுலபம். ஆனால் கரண்டியில் குழம்பு வைத்து சுற்றுவது மிகவும் கடினம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெறும் கரண்டியை சுழட்டுபவர். அவர் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்க மாட்டார்கள். இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேச அவருக்கு எந்த அளவுக்கு தார்மீக உரிமை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.