காசி விஸ்வநாதருக்கு பன்றிகளை காணிக்கை செலுத்த அனுமதிக்க வேண்டும் - மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பரமசிவன் பன்றி குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலையை தவறாமல் நடத்துவதற்கும், பக்தர்கள் பன்றி குட்டிகளை காணிக்கையாகவும், நேர்த்தி கடனாகவும் நெல்லிதோப்பு வழியாக சென்று காசிவிஸ்வநாதர் திருக்கோயிலுக்கு செலுத்துவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் உள்ள நெல்லித்தோப்பு வழியில் காசி விசுவநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சைவ சித்தாந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடை பிடிக்காமல் தான்தோன்றி தனமாக வாழ்ந்து, விலங்குகளை கொன்று சித்திரவதை செய்து ரசித்து, தவக் கோலத்தில் இருந்த குருபகவானின் கோவத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி வாழ்ந்த பன்னிரு வேளாளர்களும், அவர்களது மறுபிறவியில் பன்னிரெண்டு பன்றி குட்டிகளாக பிறந்ததாகவும், அவை பெற்றோர்களை இழந்து மலை பகுதியில் பசியால் வாடி துன்புற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
பன்றி குட்டிகளாக பிறந்த பன்னிரு வேளாளர்களுக்கும் சாப விமோட்சனம் அளிப்பதற்காக பரமசிவனே தாய் பன்றியாக அவதாரம் எடுத்து, நேரடியாக வந்து, பன்னிரெண்டு குட்டிகளுக்கும் பாலூட்டியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிவிஸ்வநாதர் கோயிலில் அருள்பாலித்து வரும் பரமபிரானின் அவதாரமான பன்றி குட்டிகளை காணிக்கையாக செலுத்துவதிலும், நேர்த்திக்கடனாக அளிப்பதிலும் இந்து சமய அறநிலைய துறையினரும், காவல்
துறையினரும் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார்கள்.
ஆகவே ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வருகின்ற முதல் அமாவாசை திதி நாளில் இந்து சமய அறநிலைய ஆட்சி துறை சார்பாக பரமசிவன் பன்றி குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலையை தவறாமல் நடத்துவதற்கும், என்னை போன்ற பக்தர்கள் பன்றி குட்டிகளை காணிக்கையாகவும், நேர்த்தி கடனாகவும் நெல்லிதோப்பு வழியாக சென்று காசிவிஸ்வநாதர் திருக்கோயிலுக்கு செலுத்துவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்ஹா பள்ளிவாசலில் ஆடுகளை அறுக்க அனுமதி கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டதோடு
போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் பன்றி குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலையை தவறாமல் நடத்துவதற்கும், பக்தர்கள் பன்றி குட்டிகளை காணிக்கையாகவும், நேர்த்தி கடனாகவும் செலுத்த வேண்டும் என வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.