#Foxconn தலைவர் யங் லியுவை காரில் அமர வைத்து தானே காரை இயக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியுவை தனது காரில் அமர வைத்து தானே காரை இயக்கி நிகழ்ச்சி மேடை வரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அழைத்துச் சென்றது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சிப்காட் சார்பில் பல்வேறு இடங்களில் தொழிற்பூங்காங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் சிப்காட் நிறுவனம் மூலம் 1,456 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.இங்கு ரூ.706 கோடி மதிப்பீட்டில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது.
சிப்காட் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் ரூ.706 கோடியில் இந்த பணி தொடங்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளாக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளாக 10 மாடிகளுடன் இந்த விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு வளாகமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் சேர்ந்து விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன் உள்ளிட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், விழாவில் பங்கேற்க ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லீயு- வை சென்னை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவே தனது காரில் அழைந்து வந்தார். யங் லீயு- வை விமான நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வரை தானே காரை இயக்கினார் அவரோடு உரையாடிபடி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பயணித்தார்.
இதையும் படியுங்கள் : ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் - #ElectionCommission திட்டவட்டம்!
பொதுவாக தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலதிபர்களும், அமைச்சர்களும் தனித்தனி கார்களில் பயணிப்பார்கள். அல்லது ஒரே காரில் பயணித்தால் டிரைவர் தான் காரை இயக்குவார். ஆனால் அமைச்சர் டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லீயுவை தனது காரின் முன் இருக்கையில் அமர வைத்து அவரே காரை ஓட்டி சென்றது கவனம் பெற்றது. இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தனது linkedin தளத்தில் பதிவிட்டுள்ளதாவது.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது ;
"நேற்று மாலை, வல்லம் வடகலில் உள்ள புதிய சிப்காட் நிறுவனத்தின் திறப்பு விழாவில் ஃபாக்ஸ்கான் தலைவர், பத்ம பூஷன் விருது பெற்ற, யங் லியு உடன் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விமான நிலையத்தில் லியுவை நான் வரவேற்று காரில் அழைத்து சென்றது முதல் நிகழ்ச்சி மேடைக்கு செல்லும் வரை வழியில் நடந்த உரையாடல்கள் வரை சிறப்பானதாக அமைந்தது. நான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது, அதன் பின்னர் அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் வழங்கிய இரவு விருந்தில் அவர்கள் கலந்து கொண்ட விதம், ஃபாக்ஸ்கான் தலைவர் எங்களோடு எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பது தெளிவாக தெரிந்தது.
தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் பாதையில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவரின் வார்த்தைகளைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது"
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.