#Delhi | ஆன்மீக பேச்சாளர் சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்... சிறுவனின் தாயார் பரபரப்பு புகார்!
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் 10 வயதான ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக்குக் ஆகியோருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமீபத்தில் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். இதற்கிடையே, நடிகர் சல்மான் கானுக்கு கடந்த 25ம் தேதி மீண்டும் கொலை மிரட்டல் வந்தது.
ஆனால், இந்த கொலை மிரட்டல் விடுத்தது பிஷ்னோய் கும்பல் இல்லை என்பதும், காய்கறி விற்பவர் என்பதும் தெரிய வந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், 10 வயதான ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அபினவ் அரோராவின் தாயார் ஜோதி அரோரா தெரிவித்துள்ளதாவது,
"லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நேற்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்பினை நான் தவறுதலாக ஏற்காமல் இருந்துவிட்டேன். தொடர்ந்து, இன்று அதே எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், அபினவ் கொல்லப்படவிருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அபினவ் பக்தியைத் தவிர வேறு எதுவுமே செய்ததில்லை.’’
இவ்வாறு அபினவ் அரோராவின் தாயார் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா (வயது 10), தனது 3 வயதில் இருந்தே ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.