‘டெல்லி சலோ’ பேரணி: விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!
நாடு முழுவதும் இன்று (மார்ச் 10) ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்தனர்.
மத்திய அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகளை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். போலிசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த மார்ச் 3-ம் தேதி செய்தியாளர்களிடம், “டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை. எல்லையில் விவசாயிகளின் பலத்தை மேலும் அதிகரித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மார்ச் 6 ஆம் தேதி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி வர உள்ளனர். மார்ச் 10-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.