#Delhi | அனைத்துக் கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்... டி.ஆர்.பாலு விளக்கம்!
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.25) தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று (நவ.24) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் இடம்பெறும் விவாதங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. மணிப்பூர் பிரச்னை, வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"திமுக சார்பில் இரு அவைகளில் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து முன்வைத்தோம். 10 முதல் 12 பிரச்னைகள் வரை திமுக சார்பாக எடுத்து வைத்துள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க கோரியுள்ளோம். கணக்கெடுப்பு எடுத்தால்தான் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்த முடியும். நீட் தேர்வு மசோதா நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது மோசமடைந்துள்ளது குறித்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பள்ளிக்கல்விக்கான சமக்கிரசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி குறித்து அவைகளில் பேச உள்ளோம்"
இவ்வாறு நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.